ஸ்ரீ வெங்கடேச பெருமாள் ஆலயம் - வரகூர்


 நாராயண தீர்த்த சுவாமிகள்

Naarayana Theerthar
         ஆந்திராவிலுள்ள வெல்லத்தூர் என்ற கிராமத்தில் நாராயண தீர்த்த சுவாமிகள் ஜனனமானார். வேதாத்யயனத்தை முடித்து விட்ட இந்த ஆந்திர வாலிபருக்கு பெற்றோர்கள் திருமணம் முடித்து வைத்தனர். தூய்மையை பெற்றிருந்த இவர், மணம் முடிந்தவுடன் சாஸ்திரங்களை பயிலலானார். வாலிபத்திலேயே விவேகத்தை கொண்டிருந்த இவர் காலக்ரமத்தில் பிராம்மனர்களுக்குற்ற தன்மைகளை முற்றிலும் ஏற்று விட்டார்.

         மேலும் கணவனை தெய்வமாக வழிபடும் ஓர் உத்தமியை இவர் அடைந்திருந்தார். ஒரு சமயத்தில் அருகிலிருந்த ஓர் நதியைக் கடந்து அண்டைய கிராமத்திற்குச் சென்றுவிட்டு திரும்புகையில் நதியின் நீர் மட்டம் சற்று உயர்ந்து விட்டது. அதைக் கவனிக்காத இவர் நதியில் இறங்கி விட்டார். நதியைக் கடந்து கொண்டிருக்கும்பொழுது திடீரென்று ஆழத்தை உணரவே, மேலும் கடக்க முடியாமலும் திரும்பவும் முடியாமலும் தத்தளித்தார். இந்த சமயத்தில் சாஸ்திரத்தில் கூறப்பட்டிருக்கும் பிராம்மணர்களின் சந்யாச நிலையை நினைவில் ஏற்றார்.

         சந்யாசத்தினால் அதே பிறவியில் மறு ஜென்மம் ஏற்பட்டு விடுவதான ஓர் பிரமாணம் எப்பொழுது சாஸ்திரத்தில் இருக்கிறதோ, அப்பொழுது தானும் நதியில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்ற சந்தேகமற்ற நம்பிக்கையை ஏற்றுவிட்டார். எனவே, அந்த க்ஷணத்திலிருந்து, தான் சந்யாசத்தை மேற்கொண்டு விட்டதான சங்கல்பத்தை கொண்டுவிட்டார். இவைகளை எல்லாம் ஒரே கணத்தில் நினைத்து முடித்து விட்டார். உடனே ஆற்று ஜலம் அற்புதமாக தணிந்தது. சுலபமாக அக்கரையை அடைந்த தெய்வசாது தன்னுடைய சங்கல்பத்தை பத்தினியிடத்தில் எப்படி வெளியிடுவது என்ற குழப்பத்தில் ஆழ்ந்தார். தன்னுடைய தர்மபத்தினியை சமாதானப்படுத்துவதில் ஏற்படக்கூடிய சிரமங்களை நினைத்து கலக்கமுற்றார். எனினும் நிகழ்ந்ததை அறிவித்து சமாளிக்க வேண்டியதைத் தவிர வேறு வழி இல்லை என்ற முடிவுக்கு வந்த கிருஹஸ்தர், வீட்டையடைந்தார்.

         ஆனால் அவருடைய இத்தகைய மனப்போராட்டங்களுக்கு பகவான் இடம் வைக்கவில்லை. கணவரை கண்ட மாத்திரத்திலேயே அதிர்ச்சியுடன் திடுக்கிட்டாள் பத்தினி. ஏனம்மா, பயப்படுகிறவள் போல் காண்கிறாயே; என்ன நடந்தது, என்று கேட்டார் கணவர். மேலே பேச வாய் எழும்பாமல் சில கணங்கள் தவித்த பத்தினி, இது என்ன கோலம்? காஷாயமும், தண்டமும், முண்டனமும் எதற்காக? என்று தழுதழுத்த குரலில் கேட்டதுடன் தாரை தாரையாக கண்ணீர் விடவும் ஆரம்பித்து விட்டாள். பத்தினியின் கண்களுக்கு புலப்பட்ட அதிசயத்தை மேலும் ஆச்சரியத்துடன் உணர்ந்துவிட்ட கணவர், நான் இன்னும் சந்நியாச கோலத்தை ஏற்கவில்லையே என்று நிதானமாக பகர்ந்தார்.

         இவர் பகர்ந்ததுதான் தாமதம், பத்தினியின் கண்களுக்கு பழைய கணவராகவே தோற்றமளித்தார் கிருஹஸ்தர். இத்தகைய திருப்தியான திருப்பத்தைக் கண்டும், மேலும் கலவரத்தைக் கொண்ட பத்தினி, இன்னும்........ என்றால் என்னவென்று வினவினாள். நதியில் நேர்ந்த சம்பவத்தை விபரமாகக் கூறி அத்தகைய சந்தர்ப்பத்தில் சந்யாச-சங்கல்பத்தை தான் எடுத்துக் கொள்ளாமல் இருந்திருந்தால் பிழைத்திருக்க முடியாது என்பதை விளக்கி ஸ்திரப்படுத்தினார் தெய்வசாது.

         உன்னுடைய மாங்கல்யத்தை பலப்படுத்துவதற்க்காகவே சந்யாச-சங்கல்பத்தை எனக்கு நினைவுபடுத்தி, எனக்கு உயிர்பிச்சை அளித்ததோடல்லாமல், உனக்கு உணர்த்தி தெளிய வைக்க வேண்டியதின் பொருட்டு அத்தகைய சந்யாச கோலத்தை உனக்கு மட்டும் காட்டினார் நமது ஸ்ரீ கிருஷ்ணன். எனவே நீ துக்கத்தைக் கொள்ளாமல் சந்தோஷத்துடன் எனக்கு விடை கொடுக்க வேண்டும்" என்று ஆறுதலான மொழிகளைப் பகர்ந்தார் தெய்வசாது. ஓரளவு அமைதியைப் பெற்ற பத்தினியோ கணவருக்கு மௌன விடையளித்துவிட்டு கணவரைக் கிருஷ்ணரின் ஸ்தானத்திலமர்த்தி பூஜை செய்து காலத்தை கழித்து வந்தாள்.

         இல்லறத்திலிருந்து அகன்ற நாராயண தீர்த்தர் ஓர் பெரியாரை அணுகி சந்யசத்தைப் பெற்று தனக்கு கிருஷ்ணனுடைய அருள் ஏற்படும்படி அனுக்ரகிக்க குருவை வேண்டிக் கொண்டார். சீடனின் பக்திமார்க்கத்தை நன்கு புரிந்து கொண்ட குரு, காவேரி தீரத்தில் அமர்ந்திருக்கும் போதேந்திர சுவாமிகளை அணுகும்படி அனுக்ரஹித்து அனுப்பினார். குருவினிடமிருந்து விடைப்பெற்றுப் புறப்பட்ட நாராயண தீர்த்தர் பல பிராந்தியங்களில் க்ஷேத்திராடனங்களை ஏற்று கடைசியாக திருப்பதியை அடைந்தார். வெங்கடேஸ்வரருடைய சந்நிதியிலேயே சில நாட்கள் வரையில் தங்கியிருக்க மனம் கொண்டுவிட்ட இவர், அனுதினமும் கோவிலைப் பிரதக்ஷணம் செய்து கொண்டே வருவதையும், சந்நிதியில் தூர நின்று தரிசிப்பதையும் தன்னுடைய பணியாக ஏற்று வந்தார்.

         இவ்வாறு ஒரு நாள் சந்நிதிக்கு நேராக, வெகு தூரத்தில் சற்று விலகி அடக்கத்துடன் பகவானை ஸ்தோத்தரித்து நின்று கொண்டிருக்கும்பொழுது, சுமார் பதினோரு வயதுள்ள ஓர் சிறுவன், இனிப்பு பண்டங்கள், வடை முதலியவைகளுடன் இவருக்கு எதிரில் காணப்பட்டான். மேலும் இவருடைய கவனத்தைத் திருப்பும் வகையில் இவருக்கு நேராக சற்று தூரத்தில் நின்று பதார்த்தங்களை துரித காலத்தில் பதம் பார்க்க ஆரம்பித்தான். சில வினாடிகளுக்குள் பண்டங்கள் காலியாகிவிட்டன. பையன் எங்கேயோ ஓடி மறுபடியும் பக்ஷணங்களை மடி நிறைய கொணர்ந்து இவரெதிரில் உட்கார்ந்து தன்னுடைய வேலையைத் துவக்க ஆரம்பித்தான்.

         சிறுவர்களுக்கு உண்டான பக்ஷண ஆசையை இந்த பையனிடத்தில் கண்ட நாராயண தீர்த்தர் ஆனந்தங் கொண்டு அவனையே உற்று பார்த்தார். வேலையில் மும்முரத்தை காட்டி வந்த சிறுவனோ, இவர் தன்னை கவனிப்பதைக் கண்டு "என்ன பார்க்கிறாய்? என்னைத் தெரியவில்லையா?" என்று கேட்டான். "எனக்கு தெரியவில்லையே" என்று பதிலளித்தார் தெய்வசாது. "நான்தான் கோபாலன், உன்னுடன் சேர்ந்து வாசிக்கவில்லையா? மறந்துவிட்டாயா?" என்று கேட்டதுடன், படித்து வந்த காலத்தில் நடந்த சில நிகழ்ச்சிகளையும் அவருக்கு நினைவூட்டினான். இதை ஆச்சரியத்துடன் கேட்ட தெய்வசாது, "ஆம், உண்மைதான்; ஆனால் கோபாலன் தற்பொழுது பெரியவனாக வல்லவோ இருப்பான். நீ சிறு பையனாக இருக்கிறாயே?" என்றார். "ஆம், நான் வளரவில்லை. அப்படியேதான் இருக்கிறேன்" என்று பதிலளித்தான் பையன்.

         இவ்வாறு உரையாடிக் கொண்டிருக்கையில் பையன் தின் பண்டங்களை வாய் நிறைய அடைத்து புசித்துக் கொண்டே இருந்தான். இதைப் பார்த்து வந்த தெய்வசாது பையனுக்கு வயிறு வலிக்குமே என்று தனது மனதுக்குள் அனுதாபத்தைக் கொண்டதுடன் சொல்லவும் மனம் கொண்டு விட்டார். எனவே அன்பும் நயமும் கலந்த பதங்களால், "குழந்தாய், வயிறு வலிக்குமே" என்று இவர் கூறி முடிப்பதற்குள், "என்ன? உனக்கு வயிறு வலிக்கிறதா?" என்று கேட்டுவிட்டான் பையன். அவ்வளவுதான்! வயிற்று வலியால் துடி துடிக்க ஆரம்பித்து விட்டார் தெய்வசாது. எனினும் தெய்வசாதுவுக்கு சித்தம் தெளிந்து விட்டது. கிருஷ்ண பரமாத்மாவே தனக்கு அருள் புரிய முன் வந்து விட்டதை உணரலானார்.

         ஆனால் கோபாலனோ, "உன் வயிற்றில் என் கையை வைக்கிறேன்; வலி தீர்ந்து விடும்" என்று கூறிக்கொண்டே மகானை நோக்கி வந்தார். இவ்வாறு தன்னை அணுகியதும், "கிருஷ்ணா! என் வயிற்றில் கை வைக்காதே; வயிற்றுவலி இருந்தால் இருந்துவிட்டுப் போகட்டும். உன்னுடைய அருளுக்காகத்தான் நான் காத்திருக்கிறேன்; என் தலையின் மேல் உன் கையை வை!" என்று பிரார்த்தித்து வேண்டிக் கொண்டார். கோபாலனும் அருள் புரிந்து மகானின் தலையில் கை வைத்தார். கை வைத்த உடனேயே மறைந்தும் விட்டார். ஆனாலும் வயிற்று வலி அப்படியே நிலைத்து விட்டது. நாராயண தீர்த்தர் முந்திய ஜென்மத்திலும் ஓர் முறை தெய்வசாதுவின் நிலையை முடித்தவராவர்.

         ஒரு சில நாட்கள் வரையில் வெங்கடேஸ்வரருடைய தரிசனத்திலமர்ந்து துதித்துவிட்டு, போதேந்திர சுவாமிகளை அடைய வேண்டுமென்ற நோக்கத்துடன் க்ஷேத்திரங்களை தரிசித்து கொண்டே சோழ நாட்டிலுள்ள கோவிந்தபுரத்தை அடைந்தார். ஆனால் போதேந்திரர் ஜீவன் முக்தியடைந்து பல மாதங்களாகி விட்டதை அறியலானார். எனினும் ஒரு சில மாதங்கள் வரையில் அந்த மஹானின் அதிஷ்டானத்தில் தங்கிவிட வேண்டுமென்ற ஓர் எண்ணம் உதயமாயிற்று. எனவே அனுதினமும் அவருடைய தியானத்திலமர்ந்து சமாதிக்குப் பக்கத்திலேயே படுக்கும் வழக்கத்தை ஏற்று வந்தார். இவ்வாறு படுத்து வந்த ஒவ்வொரு இரவிலும் சமாதியிலிருந்து வெளிக் கிளம்பிய ஸ்ரீ ராம நாமாவின் சப்தத்தை செவியுற்ற நாராயண தீர்த்தர் பக்தி மார்கத்தின் மகத்துவத்தை மேலும் உணரலானார்.

         நாராயண தீர்த்தர் அவ்வப்போது ஓரளவு வயிற்று வலியை ஏற்று வந்தாலும் கூட, அதை நிவர்த்திக் கொள்ள பகவானை பிரார்த்திக்கவும் இல்லை. கோவிந்தபுரத்தை விட்டுப் புறப்பட்ட மகான், காவேரி தீரத்திலுள்ள க்ஷேத்திரங்களை தரிசித்துக் கொண்டே திருவையாற்றை அடைந்தார். ஒரு சில மாதங்கள் வரையில் பெரும்பாலும் திருவையாறைத் தனது வாசஸ்தலமாக அமைத்து சுற்றியுள்ள பிராந்தியங்களில் சஞ்சாரத்தை ஏற்று வந்தார். இவ்வாறு முன்னிரவில் கண்டியூர் திருக்காட்டுப்பள்ளி சாலையில் நடந்து போய்க் கொண்டிருந்த பொழுது, பகவானிடமிருந்து வலுவில் வாங்கிக் கொண்ட இவரது வயிற்று வலி சற்று உக்ரஹத்தைக் கொள்ளவே, அண்டையிலிருந்த ஓர் பிள்ளையார் கோவிலில் அப்படியே அமர்ந்து விட்டார். உடனே பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் இவருக்கு நித்திரையைக் கொடுத்து கனவில் தோன்றி பின்வருமாறு கூறினார். "நீ காலையில் விழித்துக் கொண்டவுடன், யாரை முதலில் காண்கிறாயோ, அவரை பின்பற்றிப்போ; உன்னுடைய வயிற்று வலி தீர்ந்து விடும்" என்று அருளினார்.

         அருணோதயத்தில் விழித்தெழுந்த மகானோ, தன்னெதிரில் ஓர் பன்றியைக் கண்டார். பன்றியைத் தொடர்வதா என்ற தயக்கத்தை இவர் கொண்டபொழுது, பிள்ளையார் தன்னுடைய ஆள்காட்டி விரலால் சுட்டிக்காட்டி, அந்தப் பிராணியையே தொடர உத்தரவிட்டதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. பன்றி மெதுவாக ஓட ஆரம்பித்தது. இவரும் அதை பின்பற்றி ஓடினார். பிறகு வயல் வரப்புகளை எல்லாம் கடந்து அங்குமிங்குமாக ஓடி இவரை மிகவும் களைப்படையச் செய்து விட்டது. முடிவாக அண்டையிலிருந்த ஓர் கிராமத்தின் வெங்கடேச பெருமாள் கோவிலுக்குள் நுழைந்தது. இவரும் உள்ளே நுழைந்தார். ஆனால் பன்றியை அவ்விடம் காணவில்லை. ஆனால் அதே சமயத்தில், "நான் தான் உன்னை அழைத்து வந்தேன். நீ தேட வேண்டாம்" என்ற அசரீரியைக் கேட்ட மகான் அடங்காத ஆனந்தத்தைக் கொண்டார்.

         இந்தச் சம்பவத்திலிருந்து அந்த கிராமம் வரகூர் என்ற பெயரை அடைந்தது. இவருடைய தெய்வீக மேன்மையை உணர்ந்த கிராமத்தினர் இவருக்கு இடமளித்து உபசரித்து வந்தனர். அன்றாடம் இவர் தரிசித்து வந்த வெங்கடேச பெருமாள் இவருக்கு கிருஷ்ணனாகவே காட்சி அளித்து வந்தார். நாராயண தீர்த்தர் திருப்பதியில் கிருஷ்ணனுடைய அருளை பெற்றதிலிருந்தே கிருஷ்ணனை ஸ்தோத்தரித்து பாடல்களை அமைக்க மனம் கொண்டார். வரகூரில் தன்னுடைய ஸ்திர வாசத்தை ஏற்றுவிட்ட சில ஆண்டுகளுக்குள் அந்த பாடல்களை முடித்தேற்றினார். ஜீவாத்மாவான ஜெயதேவரால் இயற்றப்பட்ட அஷ்டபதியைப் போல, நாராயண தீர்த்தரின் 'கிருஷ்ண லீலா தரங்கிணி' போன்ற பாடல்கள் கிருஷ்ணனின் பால்ய லீலைகளை விளக்குவதாகும். இவர் ருக்மிணி கல்யாணத்தைப் பாடி இருப்பதுடன், சிவன், துர்க்கை, விக்னேஸ்வரர், முதலியவர்களின் பேரிலும் ஸ்தோத்திரப் பாடல்களை இயற்றியிருக்கிறார்.

         இவர் அன்றாடத்திய தனது கிருஷ்ண விக்ரஹத்தின் பூஜை முடிவடைந்தவுடன் பூஜை ஸ்தலத்தை மறைத்து திரைபோட்டு விடுவார். இவருக்கு அவகாசம் நேரும் சமயங்களில் தரங்கிணியைக் கானம் செய்து வரும் வழக்கத்தை ஏற்று வந்தார். அத்தகைய சமயங்களில் இவருடைய கானத்திர்கேற்றவாறு கெஜ்ஜை கட்டிய கால்களுடன் நர்த்தனம் செய்யும் ஒலியைத் திரைக்குப் பின்னால் அளித்து வந்தார் கிருஷ்ணன். இத்தகைய பரமானந்தத்தில் ஆழ்ந்து வந்த ஓர் சமயத்தில் பகவான் இவரை அழைத்துக் கொண்டார். வரகூரில் நிர்யானமடைந்த இவரது சமாதி ஸ்தலம் அக்காலத்திலேயே மறைந்து விட்டது. ஸ்ரீ கிருஷ்ணர் இவருக்கு பல விதங்களில் காக்ஷியளித்திருக்கிறார். பெருமாள் கோவிலுக்கருகில் இந்த தெய்வீக புருஷருக்கு ஓர் நினைவு மண்டபம் நிர்மாணிக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். - Referenced Book: ஏணி படிகளில் மாந்தர்கள்
 - சிவன் சுவாமிகள் (Brother of Kanchi Sri Maha-Periyavar)