ஸ்ரீ வெங்கடேச பெருமாள் ஆலயம் - வரகூர்


 ஸ்ரீ கிருஷ்ண லீலா தரங்கிணி

Gopuram
          வடமொழியில் தரங்கிணி என்ற சொல் ஒரு நதியின் அலைகளைக் குறிக்கும். ஸ்ரீ கிருஷ்ண லீலா தரங்கிணி என்பது கிருஷ்ணனின் விளையாட்டு லீலை அலைகள் ஆகும். இக்காவிய அமைப்பில் 12 தரங்கங்களும், 153 கீர்த்தனங்களும், 302 ஸ்லோகங்கலும், 31 சூர்ணிகைகளும் உள்ளன. ஸ்ரீ கிருஷ்ணனின் பால லீலைகள் அலைகளாக வந்து பக்தர்களின் உள்ளங்களை மோதி பரவசப்படுத்தி உயர்ந்த நிலைக்கு எடுத்துச் சொல்வதால் இக்காவியம் "ஸ்ரீ கிருஷ்ண லீலா தரங்கிணி" என்று பெயர் பெற்றதாகும்.

         ஸ்ரீமத் பாகவதத்தில் 10வது ஸ்கந்தம், 1 முதல் 58 வரை உள்ள அத்தியாயங்களில் கூறப்பட்டுள்ள ஸ்ரீ கிருஷ்ணனின் பிறப்பு முதல், அவருடைய பல பால லீலைகளை கூறுகிறது. முக்கியமாக ஸ்ரீ கிருஷ்ணனின் அவதாரம் பால லீலைகள் "கன்றுகளையும், பசுக்களையும் மேய்தல், கோபி வஸ்திராபஹரணம், கோவர்த்தன மலையை தூக்குதல், ராஸக்கிரிடை, கம்ஸன் முதலிய அசுரர்களை அழித்தல், கடலின் நடுவே துவாரகையை அடைந்து அதில் பிரவேசித்தல், ஸ்ரீ பலராமன் விவாகம், ஸ்ரீ கிருஷ்ணன்-ருக்மிணி கல்யாணம் மற்றும் ஜாம்பவதி, சத்யபாமா முதலிய 8 பட்ட மகிஷிகளின் விவாகம்" ஆகியவைகள் இக்காவியத்தில் விரிவாக பக்தி ரஸத்துடன் பாடபட்டுள்ளன.

         ஒவ்வொரு தரங்கத்திலும் வரும் லீலைகளின் பாத்திரங்களின் பெயர்களைக் கூறியபின், ஸ்லோகம், கீதம், சூர்ணிகை இவற்றால் அந்தந்த லீலைகளை விளக்கிக் கூறபட்டுள்ளன. பக்தர்கள் சபையில் அங்கீகரிக்கபட்ட மேடையில் தேர்ச்சிப் பெற்ற நடிகர்களால் கிருஷ்ணனின் லீலைகள் அபிநயம் செயத்தக்கவாறு இக்காவிய கீதம் உள்ளதாக இக்கீதத்தைக் நன்கு கற்று அறிந்தவர்கள் கூறுகின்றனர்.

         குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணனின் கோயிலில், ஸ்ரீ நாராயண பட்டத்ரி அருளிய ஸ்ரீ நாராயணீயம் பாடல்கள் எவ்வாறு ஸ்ரீ கிருஷ்ணனின் ஒப்புதலை பெற்றதோ அதேபோல் "ஸ்ரீ கிருஷ்ணா லீலா தரங்கிணியின் பாடல்களும் வரகூர் ஸ்ரீ வெங்கடேச பெருமாளால் அங்கீகரிக்கப்பட்ட பாடல்களாகும்.

         ஸ்ரீ நாராயண தீர்த்தர், கிருஷ்ண லீலா தரங்கிணியின் கீதங்களை இயற்றி பாடியபோது, ஸ்ரீ வெங்கடேச பெருமாள், திரைக்கு பின்னால் காலில் கெஜ்ஜையுடன் கீதங்களுக்கு ஏற்ப நடனமாடியதகவும் அக்கோயிலில் அர்த்த மண்டபத்தில் உள்ள ஸ்ரீ ஆஞ்சநேயர் தாளம் கொட்டியதகவும், அதனால் அவருக்கு "தாளம் கொட்டி ஆஞ்சநேயர்" என்று பெயர் வந்ததாகவும் சொல்லப்படுகிறது. இன்றும் வரகூர் பெருமாள் கோயிலில் பூஜை,ஸ்வாமி புறப்பாடு, பஜனை ஸம்ப்ரதாயம் மற்றும் நிவேதனம் செய்தல் இவ்வனைத்தும் மகான் ஸ்ரீ நாராயண தீர்த்தர் வழிகாட்டிய முறையிலேயே அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.

  உறியடியோ கோவிந்தோ....